பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 20 பயிற்சிக் காவலர்களை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
கலாத் மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவர்கள், விடுமுறைக்காக பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மஸ்துங் அருகே குவெட்டா - கராச்சி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் பேருந்தை வழிமறித்து, 20 பேரையும் கடத்திச் சென்றனர். ஓட்டுநர் மற்றும் 3 பொதுமக்களை அவர்கள் விடுவித்தனர். இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.பலுசிஸ்தானில் பிரிவினைவாதக் குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.